உங்கள் உலகம்
உங்கள் மனதைப் பொறுத்து எண்ணங்கள் அமையும் ! உங்கள் எண்ணங்களைப் பொறுத்து வாழ்க்கை அமையும் ! ** உங்கள் வாழ்க்கையைப் பொறுத்து வெற்றி அமையும் ! உங்கள் வெற்றியைப் பொறுத்து ஆரோக்கியம் அமையும் ! உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்து மனம் அமையும் ! - புரிகிறதா... இரு ஒரு சக்கரம். மக்கள் எப்போதும் நம்மை
பிரதிபலிக்கும் கண்ணாடிகளாகவே செயல்படுகிறார்கள்.
நாம் மரியாதை கொடுத்தால், மரியாதை கிடைக்கும். சீண்டினால் சீண்டப்படுவோம். அன்பு செலுத்தினால், அன்பு கிடைக்கும். எப்போதும் எரிச்சலும் கோபமுமாக இருந்தால் உலகமே தவறு செய்வதாகவும், ஒவ்வொருவரும் திட்டம் போட்டு எரிச்சல்படுவதாகவும் தோன்றும்.
ஒருவருடைய உலகத்திற்கும் மற்றவருடைய உலகத்திற்கும் சம்பந்தமே இல்லை. அவரவர் கருத்து கண்ணோட்டம்.
மனம் பொறுத்து உலகம் விதவிதமாக மாறி மாறித் தெரியும்.
உண்மையில் எல்லோரும் இயல்பானவர்கள், அருமையானவர்கள், நீங்கள் உலகத்தை அணுகும் விதத்தைப் பொறுத்து உலகம் அணுகும் விதத்தைப் பொறுத்து உலகம் மாறுபடும். உலகம் அருமையானது... உணர ஆரம்பியுங்கள். உண்மை புரியும் !
அத்தனைக்கும் ஆசைப்படலாமா?
கவலையை எதிர்கொள்ளும் துணிவு இல்லாதவன் - எல்லாவற்றிற்கும் ஆசைப்பட்டால் அவன் கதி! அதோ கதிதான்! (காரணம் நிறைவேறாத ஆசை, கவலையாக மாறும் ! )
எல்லாவற்றிற்கும் ஆசைப்படுவது மனித இயல்புதான். மனமும் அதைத்தான் தூண்டும். ஆனால், ஆசைப்படும் முன் யோசியுங்கள், முடியா விட்டால் பின்னாவது யோசியுங்கள். - இது சாத்தியமா ? இல்லையா ? ஆசைப்படுவது எளிது. ஆனால் அது சாத்தியம் இல்லை என்று தெரிந்து உதறித் தள்ளுவது கடினம்.
எனவே ஆசைப்படும் முன் யோசிப்பது புத்திசாலித்தனம். எளிதும் கூட.
எனக்கு ஆசைப்படவும் தெரியும்! சாத்தியமில்லை, தேவையில்லை என்று தெரிந்தால் அதை உதறவும் தெரியும்! கவலையைப் பற்றி எனக்கு கவலையில்லை.
- இந்த அளவுக்கு வாழ்க்கையை அணுகும் பக்குவம் பெற்றிருந்தால் நீங்கள் எதன் மீதும் ஆசைப்படலாம் தவறில்லை. அத்தனைக்கும் ஆசைப்படுங்கள். அது சரியே.