உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam
போலித் திருப்தி தன்மை என்றால் என்ன?
- திருப்தி இரண்டு வகை. ஒன்று - போலித் திருப்தி. இரண்டு - ஆழ்ந்த திருப்தி.
- உணவு, உறக்கம், காமம், கிளர்ச்சி அல்லது விளையாட்டு என்ற இந்த நான்கு விஷயங்களிலேயே ஐந்தறிவு ஜீவிகள் திருப்தி காண முயற்சிக்கும். இதைத் தாண்டி ஒரு படி கூட எடுத்து வைக்க முடியாது.
- காரணம் முழுமையாக யோசிக்கும் மனித மனம் அவற்றிடம் இல்லை. மனம் இருந்தும் மனிதன் உணவு, உறக்கம், காமம், அந்தஸ்து தேடுவதில் சுகம் கண்டு ''நான் திருப்தியாகத் தான் இருக்கிறேன்' என்று சொன்னால் அதுதான் போலித் திருப்தி.
- அன்பு, நிம்மதி, ஆனந்தம் இவற்றை அடைய முயற்சி செய்து அடைந்த பின் கிடைப்பதுதான் ஆழ்ந்தத் திருப்தி.
- போலித் திருப்தி அதிருப்தியைவிட மிக மோசமானது !
- "நான் நிம்மதியாக இருக்கிறேன்'' என்ற கற்பனை எண்ணமும், ''நான் திருப்தியாக இல்லை'' என்ற உணர்வும் கலந்து வெளிப்படும்போது அது போலித் திருப்தியாக மாறி விடுகிறது.
- உலக விஷயங்களில் திருப்தியே இல்லாமல் அடுத்து என்ன? அடுத்து என்ன? என்று செய்துகொண்டே இருப்பது நம்மிடமிருக்கும் கொஞ்ச நஞ்ச நிம்மதியைக் கூடக் கெடுத்துவிடும்.
வாழ்வில் திருப்தியே அடையாதவர்கள் பைத்தியமாகக்கூட அலைய நேரிடலாம்.
- உண்மையை உணர்வதில் - திருப்தி ! பெருந்தன்மையாக நடந்து கொள்வதில் - திருப்தி ! கருணைக் காட்டுவதில் - திருப்தி மற்றவர்களுக்குக் கற்றுத் தருவதில் - திருப்தி ! - என திருப்தி வாழ்க்கைத் திடலில்
கொட்டிக்கிடக்கிறது.
- ஆழ்ந்த திருப்தி உங்களுக்குள் மலரும்வரை 'போதும்' என்ற உணர்வு மலராது.
- போலித் திருப்தி உங்களைத் தொற்றிக் கொண்டிருக்கும் வரை 'இதுக்கு மேலே என்ன இருக்கும் ?' என்ற மந்த எண்ணம் எழுந்து கொண்டே இருக்கும்.
- போலித் திருப்தியை ஒழிக்க மிகச் சரியான வழி வாழ்வின் ஒவ்வொரு - நிகழ்விலும் திருப்தியைக் காண்பதுதான்.
- ஆழ்ந்த திருப்தியைப் பெறுவதற்குத் தொடர்ந்து உங்கள் புத்திசாலித்தனத்தை உபயோகப்படுத்திக் கொண்டே இருங்கள்.
- போலித் திருப்தியிலிருந்து உதறி எழுந்து திருப்தியை நோக்கிப் பயணம் செய்ய ஆரம்பியுங்கள்.
மனப் பட்டிமன்றம்
- 'அவர் சொன்னார், இவர் சொன்னார்' என்று பலவிதமான விஷயங்களை நாம் நம் மனதில் போட்டு அடைத்து வைத்திருக்கிறோம்.
- மதங்களின் பெயரால், இயக்கங்களின் பெயரால் பொழுதுபோக்கு அம்சங்கள் வழியாக நீங்கள் தெரிந்து வைத்திருக்கிற விஷயங்களைத் தவிர்த்து வேறெதுவும் நீங்கள் பேச முடியாது.
- இவற்றைப் பொறுத்துதான் உங்கள் Inner chattering' (மன உளறல்) அமையும்.
- வெட்டிப் பேச்சு -வெட்டி எண்ணங்கள் உங்கள் மனதை வெட்டிக்
கொண்டிருக்கின்றன என்பதற்கான ஆதாரம்.
- தனிமையில் நீங்கள் யாருடனும் பேசாத வேளையில் உங்களுக்கு நீங்களே பேச ஆரம்பிக்கிறீர்கள்.
- தூங்கிய பிறகு கனவில் பேச ஆரம்பிக்கிறீர்கள்.
- இப்படி இருபத்து நான்கு மணி நேரமும் நீங்கள் பேசிக்கொண்டே இருப்பதால்தான் உங்களால் நிம்மதியாக இருக்க முடிவதில்லை.
- ஒட்டமாய் ஓடும் மனக்குதிரையையும், ஓயாமல் நடக்கும் மனத்தின் பட்டி மன்றத்தையும், ஒருவழிக்கு கொண்டு வராத வரை, 'நிம்மதி', 'ஆனந்தம்', 'நோயற்ற வாழ்வு' என்ற பேச்சுக்கே இடமில்லை.