உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam
ஞாபகச் சக்திக் கிடங்கின் மந்திரசாவி
- 'விருப்பம்' என்னும் மந்திரச் சாவி இருந்தால், ஞாபகம் என்னும் கிடங்கை திறப்பது வெகுசுலபம்.
- படிப்பு ஒரு சுமை - படிப்பின் மீது விருப்பம் உள்ளத்தில் மலராதவரை இது உண்மை.
- படிப்பு ஒரு சுவை - படிப்பின் மீது விருப்பம் உள்ளத்தில் மலர்ந்தபின் உணரப்படும் உண்மை.
- படிப்பு ஒரு சுமை என்பதும், படிப்பு ஒரு சுவை என்பதும் அவரவர் விருப்பத்தின் அளவைப் பொறுத்தது. உண்மையில் உங்களுடைய ஞாபக சக்தியில் எந்த குறையும் இல்லை.
- உங்கள் விருப்பத்தில்தான் குறை இருக்கிறது. குறை ஞாபகச்சக்தியில் அல்ல. விருப்பத்தின் அளவில் இருக்கிறது.
- படிப்பு ஒரு சுமை போல, இந்த காலத்தில் ஆகிவிட்டதாலும், மனதைச் சிதறடிப்பதற்கு ஏகப்பட்ட வழிமுறைகள் உருவாகிவிட்ட காரணத்தாலும் - நம் மனம் நம்மிடம் இல்லை.
- பெரும்பாலும் நமது விருப்பம் சூழ்நிலைக்குச் சூழ்நிலை மாறிக் கொண்டேயிருக்கும் விருப்பங்கள்தான். இப்போது உங்களிடம் இருக்கும் விருப்பங்களும், ஆசைகளும் உங்களுடைய சொந்த விருப்பமாக இருப்பதற்கு 99% வாய்ப்பு இல்லை.
- எனக்குப் படிப்பின் மீது விருப்பமில்லை என்பதும், வெளி விஷயங்களில்தான் அதிக நாட்டமும் அதிக விருப்பமும் இருக்கிறது என்பதும் காலத்தின் கோலங்களே!
- விருப்பம் திசைமாறியது விபத்துதான். இருந்தாலும் விருப்பத்தைத் திசை மாற்ற விரும்பினால் விருப்பத்தை நம் நோக்கத்திற்கே திருப்பி விடலாம். இது சாத்தியமே.
- விருப்பத்தையும், நாட்டத்தையும் அதிகப்படுத்துங்கள் (படிப்பில்) ஞாபக சக்தி தானாய் அதிகமாகிக் கொள்ளும்! - இது இயற்கையின் விதி.
மனம் எனும் குழந்தை
மனித மனம், அது முதலில் கிரகிக்கும் கருத்துக்கள் மற்றும் சம்பவங்களைக் கொண்டு தன்னை உருவாக்கிக் கொள்கிறது. அவற்றிற்குள் உறைந்து இறுகிப்போகிறது. அது நல்லதானாலும், கெட்டதானாலும்! வாழ்க்கையில் ஒரே மாதிரியான சுக துக்கங்களையே மனிதன் தொடர்ந்து அனுபவிக்க காரணமானது இந்த மனதின் எலும்புகள்தான்.
மனித உடலுக்கு எலும்புகள் போல், மனதிற்கு எண்ணங்கள்! எண்ணங்களே இல்லையென்றால் மனமே இல்லை.
- எண்ணங்களின் தொகுப்பே மனம். இதில் வேடிக்கை என்னவென்றால், எலும்புகள் வளைந்தோ, நெளிந்தோ போய் விட்டால் மனிதன் குட்டையாகவோ, கூனாகவோ மாற வேண்டியதுதான். எண்ணும் விதம் களங்கப்பட்டதாகவோ ஆனந்தத்திற்கு மாறானதாகவோ இருந்தால் ... நம் மனமும் கூனாகவோ, குருடாகவோ மாறிவிடும்.
- விதவிதமான எண்ணங்கள் மனிதனுக்குள் சமுதாயத்திலும் உறவினர்களாலும் திணிக்கப்படுகிறது. எண்ணங்கள் சேரச் சேர மனம் என்னும் குழந்தை வளர ஆரம்பிக்கிறது.