KAILASA Library/உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam/உயிர்ச்சக்தி விரயத்தை தடுக்கும் வழிSign in
உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam

உயிர்ச்சக்தி விரயத்தை தடுக்கும் வழி

அவமானம் நேரும்போது ... பிரச்சினைகள் வரும்போது ... தவறு செய்யும்போது ... என்று படபடப்பு நமக்குள் ஏற்படும் ஒவ்வொரு நிமிடமும் நாம் பீதியில்தான் வாழ்கிறோம்.

நமக்குள்ளே படபடபடப்பை உணர்வது, பேச்சுத் தடுமாறுவது, விரல்கள் நடுங்குவது ... இதில் ஏதாவது ஒன்று இருந்தாலும் சரி -அந்த நேரங்களில் நாம் நம் கட்டுப்பாட்டை இழக்கிறோம் என்று அர்த்தம். அதன் விளைவாக ஏற்படும் உயிர்ச் சக்தி விரையம்தான் நடுக்கத்தையும், படபடப்பையும் உண்டு பண்ணுகிறது.

இதுதான் பீதி.

  • இந்த பீதியிலிருந்து எப்படி வெளிவருவது ? எளிது, பயத்தை கண்டு பயந்துவிடாமல் பயமே பயப்படுமளவுக்கு பயத்தை விழிப்புணா்வோடு அணுக ஆரம்பியுங்கள்.
  • பயத்தில் பயந்து படபடத்து, பீதியடைவதற்கும், பயத்தை விழிப்புணர்வோடு பார்த்து பீகியின் வெளிப்பாடான படபடப்பையே தாண்டுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. சுருக்கமாகச் சொன்னால்… பயத்தை தைரியத்தோடு எதிர்கொள்ளுங்கள். பிரச்சினை தீர்ந்தது.

யார் சிஷ்யன்?

ஒரு சீடனால், குருவின் வார்த்தையை அப்படியே நம்ப முடியும். குருவின் நேரத்தையோ, தன் நேரத்தையோ சந்தேகங்களில் வீணடிக்க மாட்டான்.

ஒரு பக்தனால், குருவின் வார்த்தைகளை காது கொடுத்து கேட்க முடியும். ஆனால், நம்பி ஏற்றுக்கொள்ள நேரமாகும்.

ஒரு பார்வையாளன்,

'இந்த குரு உண்மையிலேயே குருதானா!' என்று சோதிப்பதிலேயே நேரத்தை வீணடித்து விடுவான்.

சீடன், பக்தன், பார்வையாளன் என்பது குருவை நீங்கள் அணுகும்விதத்தைப் பொறுத்தது.

கடமை! மடமை!

  • கடமை! கடமை! என ஓடியதில் பலரின் வாழ்வே கடமைக்கென்று மாறிவிட்டது. கடமைக்காக வாழ ஆரம்பித்துவிட்டார்கள். இது கொடுமை.
  • கருணை ஒரு உற்சாகச் சக்தி. கருணையின் வெளிப்பாடாகக் கடமை அமைந்தால்தான் வாழ்க்கை உற்சாகமாக இருக்கும். உற்சாகமாக வாழ முடியும்.
  • கருணையால் உற்சாகப்பட்டு நம் உறவுகளுக்குச் சேவை செய்யாமல், கட்டயாத்தின் பேரில் உந்தப்பட்டு நம் உறவுகளுக்குச் சேவை செய்ய இறங்கினால் சேவை பூர்த்தியாகும். ஆனால் உங்களின் தனித்தேவை பூர்த்தியாகாது. ஆனந்தமே உங்களின் உண்மையான தனித்தேவை.
  • கருணையால் சேவை செய்தால்தான் அது கடமை. கட்டாயத்தால் சேவை செய்தால் அது கடமை அல்ல அது மடமை. உங்களின் சேவை கடமையா? மடமையா ?

கடமை உங்களை உறிஞ்சுகிறதா?

  • கடமைகள் 'கடமையே!' எனச் செய்யப்படக்கூடாது. கடமை வாழ்வின் ஒரு கட்டாயமாக மாறி மனிதனைக் கட்டுப்படுத்தவும் கூடாது.
  • கடமையானது, துள்ளலோடும், ஆனந்தத்தோடும் செய்யப்பட வேண்டும்.
  • நம் வாழ்வில் நாம் சுதந்திரமாக முடிவெடுத்து செய்யும் உற்சாகமான காரியமாகக் கடமை இருக்க வேண்டும்.
  • கடமையும், கருணையும் ஒன்றோடொன்று மிக நெருங்கிய தொடர்புடையவை. கருணையின் வெளிப்பாடாக கடமை இருந்தால் அது கடமையாற்றுபவனை இன்பத்தில் ஆழ்த்தும். கட்டாயத்தின் வெளிப்பாடாக கடமை அமைந்து விட்டால் அது கடமையாற்றுபவனை துன்பத்தில் வீழ்த்தி விடும்.
  • கடமைகள் மனிதனுக்குப் பிரச்சினைகளை உண்டு பண்ணுவது கடமையின் காரண சக்தியைப் பொறுத்தது.

காரண சக்தியானது 'கட்டாயம்' என்னும் உறிஞ்சும் சக்தியா? 'கருணை' என்னும் உற்சாக சக்தியா ? என்பதைப் பொறுத்து கடமை துன்பமா அல்லது இன்பமா என்பது முடிவு செய்யப்படும்.