Lines of Wisdom Which Makes You Beautiful - Part 1
உன் நாடகம் முடியும் போது ...
- ஜென் கூற்றுகள் எளிமையானவை! ஆனால் ஆழமானவை! வாழ்க்கைத் தத்துவங்களை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல எளிதாக விளக்குபவை !
- இது வாழ்வில் விடிவுக்கு ஜென் கூறும் கூற்று : நீ ஏங்கினாலும், ஏங்காவிட்டாலும், மழை பெய்யும்போது பெய்யும். மழைக்கு மட்டுமல்ல...இது வாழ்வின் எல்லா எதிர்பார்ப்புகளுக்கும் பொருந்தும். பொருத்திப் பாருங்கள் கூற்றின் ஆற்றல் புரியும்.
- உம் சித்தத்திற்கும், இறைவனின் சித்தத்திற்கும் சம்பந்தமே இல்லை. எனவே வருந்தாதீர்.
- நாடகத்தில் தன்னை மறந்த மனிதன் நாடகத்தோடு சேர்ந்து உண்மையாகவே அழுவதும், சிரிப்பதும் இயற்கை.
- அதேபோல்தான் உலக நாடகத்தில் தன்னை மறந்த மனிதனும் உலகத்தோடு சேர்ந்து உண்மையாகவே அழுவதும், சிரிப்பதும் இயற்கை.
- உண்மை என்ன ? நான் யார் ? ஏன் வந்தோம் ? என்ற எல்லாமோ, நாடகம் முடியும்போது தெரிய ஆரம்பிக்கும்.
இறைவனால்கூட காப்பாற்ற முடியாது
- மனமானது இறைவனைப் பற்றிய கற்பனைகளில் சிக்கிக் கொண்டால் இறைவனே நினைத்தால்கூட காப்பாற்ற முடியாது. 'அடேய்! உன் மனம் சிக்கிக் கொண்டு விட்டது' என்று இறைவனே நேரில் வந்து சொன்னால்கூட புரிந்து கொள்வது கடினம்.
- மனம் பக்குவப்பட்டுக் கொண்டிருக்கும்போது, 'எல்லாவற்றையும் இறைவன் செய்கிறார். எல்லாம் அவன் செயல்' என்று சொல்வது உண்மையாக இருக்க முடியாது. காரணம் மனம் கிளிப்பிள்ளையைப்போல் மற்றவர்கள் பேசுவதைப் பிடித்துக்கொண்டு பேச ஆரம்பிக்கும். அது வார்த்தை ரீதியானது.
மனம் பக்குவப்பட்ட பின், மனம் கடந்த நிலையில், 'எல்லாம் இறைவன் செயல்' என்பதை அனுபவித்து இதயப் பூர்வமாக சொல்லும்போது மட்டுமே அது உண்மை. இது உணர்வு ரீதியானது.
- மனப்பக்குவமில்லாத, இதுபோன்ற பெரிய பெரிய அனுபவ உண்மைகளை தன் மனக் கண்ணோட்டம் மூலம் புரிந்துகொண்டு பேச ஆரம்பித்தால், கடைசிவரை உண்மை தெரியாமலே வாழ்க்கை முடிந்துவிடும் அபாயம் இருக்கிறது.
இது போன்ற மக்களுக்காக ... 'எல்லாம் அவன் செயல், எல்லாம் இறைவன் பார்த்துக்கொள்வான் என்றால்! நீங்கள் எதற்காக இருக்கிறீர்கள்? சதா அதைக்கொடு, இதைக்கொடு என பிச்சை கேட்கவா? அல்லது சதா என்னைக் காப்பாற்று என்று பயப்படுவதற்கா? சதா மேல் நோக்கியே இறைவனைத் தேடும் நீ எப்போது இறைவனை உள்நோக்கித் தேட ஆரம்பிக்கிறாயோ, அப்போது இந்த உடலிலேயே இறைவனைக் கண்டு கொள்வாய்.
- அப்போது இந்த உலகத்திலேயே மொத்த சொர்க்கத்தையும் அனுபவிப்பாய். இது புரியாவிட்டால் உன்னை கடவுளே நினைத்தால் கூட காப்பாற்ற முடியாது'
என்னும் ஜூ-மல்கியின் வாசகங்கள் இந்த இடத்தில் குறிப்பித் தக்கவை.
- மனிதன் அந்தக் காலத்திலிருந்தே மந்த மனம் விரிக்கும் வலைகளிணில் சுலபமாகச் சிக்கிக் கொள்கிறான்.
- சிக்கிக் கொண்டதுகூடத் தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறான்.