வாழ்வின் மாயங்கள்
- 'நான் யார் ?
நான் எவ்வளவு பெரிய ஆள்? என் கௌரவம், என் கொள்கை' என்று வறட்டுப் பிடிவாதம் பிடித்துக் கொண்டு வாழ்க்கை நடத்தினால், உங்கள் பிடிவாதம் மட்டுமே உங்களுக்கு மிச்சம்! இந்தப் பிடிவாதத்தால் பல இழுப்புகளை நிச்சயம் சந்திக்க நேரிடும் !
- பிடிவாதம் என்பது உங்கள் மனதைப் பிடித்துக் கொண்ட வாதம். பைசாவுக்கும் பிரயோசனம் இல்லாத பிடிவாதத்தை விட்டுவிட்டு ஆயிரக்கணக்கான இழுப்புகளிலிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள்!
*
- 'யார் நீ?' என்ற கேள்விக்கு - பெரும்பான்மையான மக்கள் கூறும் பதில்கள், படிப்பறிவில்லாதவன்
'உடல்தான் நான்' என்று நினைக்கிறான். படித்தவன்
'மனம்தான் நான்' என்று நினைக்கிறான். பண்டிதன்
'ஆத்மாதான் நான்' என்று நினைக்கிறான். இந்த மூன்று நினைவுகளும் மனிதனின் மாயங்களே! வெறும் கருத்துக்களே! உண்மையான நீங்கள் யார்? என்ற சுய அனுபவம் கிடைக்காத வரை 'நீங்கள் யார்' என்பதைப் புரிந்துகொள்ளவே முடியாது.
- வாழ்வே மாயம் ; 'வாழ்வே மாயம்' என்று பிரச்சினைகளால் தத்தளிக்கும் சராசரி மனிதன் கூறினால் அது பொய்.
வாழ்க்கையை அனுபவிக்கத் தெரியாததற்குக் கூறும் சப்பைக்கட்டு.
- 'வாழ்வே மாயம்' பிரச்சினைகளை எதிர்கொள்ளும் தைரியசாலி கூறினால் அது உண்மை. வாழ்க்கையின் வலிகளை அனுபவித்து வாழ்வைப் புரிந்து கொள்வதால் பிறந்த தெளிவான கருத்து.
- 'வாழ்வே மாயம்' பிரச்சினைகளால் பாதிக்கப்படாத நிலையை அடைந்த ஞானி கூறினால், அது சத்தியம். வாழ்க்கையின் இன்ப, துன்பத்தை முழுமையாக அனுபவித்து அனுபூதி அடைந்ததின் வெளிப்பாடு.
- 'வாழ்வே மாயம்' என்று ஒரு ஞானி கூறியதை ஒரு சராசரி மனிதன் 100% தவறாகப் புரிந்துகொள்வான்.
- அவனது தத்தளிக்கும் வாழ்க்கையை நியாயப்படுத்திக் கொள்ள ஒரு கருத்தாகப் பயன்படுத்திக்கொள்வான்.
- அவ்வளவே, இது சத்தியத்தை மாற்றிப் புரிந்துகொண்டு சத்தியத்தைப் பொய்யாக்குவது.
- இதுதான் மாயைகளிலேயே மிகப் பெரிய மாயை.
கவலை! சந்தோஷம்! ஆனந்தம்!
- சந்தோஷம் என்ற ஒளி இல்லாத வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் கவலை என்ற இருள் வந்து பற்றிக்கொள்ளும்.
- சந்தோஷம்,
கவலை என்ற இரண்டையும் தாண்டிய நிலைதான் ஆனந்தம்.
- சந்தோஷம் நிரந்தரமாக எவருக்குமே இருப்பதில்லை. கவலையைக்கூட, இந்த நேரத்தில் வரும், இவ்வளவு நேரம் இருக்கும் என்று பலரால் சொல்ல முடியும்.
ஆனால், சந்தோஷம் எப்போது வரும், எவ்வளவு காலம் இருக்கும் என்று சிலரால் சொல்லக்கூட முடியாது. அதனால்தான் சந்தோஷம் ஒரு தோஷம்.
- சந்தோஷத்திற்கு நச்சு கவலை. கவலைக்கு மருந்து சந்தோஷம்.
கவலை ஒரு வலை ! சந்தோஷம் ஒரு தோஷம்! ஆனந்தம் ஒன்றே நிரந்தரம்!
- ஒரு இடத்தில் வெளிச்சம் மறைந்த அடுத்த நொடியே யாருமே அழைக்காமல் அந்த இடத்தில் இருள் வந்து சேர்ந்துவிடும்.
- ஒருவர் மனதில் சந்தோஷம் குறைந்த அடுத்த நொடியே சந்தடியே இல்லாமல் மனதில் கவலை தோன்றி விடும்.
- சந்தோஷம் கவலையை மறைத்து விடும். ஆனால் ஆனந்தம் கவலையை வேரோடு பிடுங்கி எறிந்து விடும்.
கவலை மறந்து வாழலாம் - சந்தோஷித்தால், கவலை துறந்து வாழலாம் - ஆனந்தித்தால் !
எது ஞானம் ?
- பொதுவாக மனிதர்கள் ஞானத்தை பற்றி வைத்திருக்கும் கருத்துக்கள் இரண்டு: 1. விஷய ஞானம் அதாவது அறிவு. 2. அனுபவ ஞானம் அதாவது அனுபவம். உண்மையான ஞானம் - விஷய ஞானத்தையும், அனுபவ ஞானத்தையும் தாண்டியது. அறிவையும், அனுபவத்தையும் தாண்டியது அனுபூதி. இந்த அனுபூதி ஆனந்தத்தின் உச்சம். அனுபூதிதான் உண்மையான ஞானம்.
- வெறும் செய்திகளும் அறிவும் மூளையை நிரப்பும். அறிவைத் தாண்டிய அனுபவமே விடுதலையைத் தரும்.
- அறிவை அனுபவமாக மாற்ற முயற்சி செய்தால் ஓர் உண்மை தெரியவரும். அதாவது, பெரும்பாலான உலக அறிவுக்கும் வாழக்கை அனுபவத்திற்கும் சம்பந்தமே இல்லை என்று !
- வாழ்க்கைப் பாடங்களை முழுமையாகப் புரிந்துக் கொள்வதே பூரண ஞானம். அறிவை அனுபவமாக்கி அனுபூதி நோக்கி நகருங்கள் !