KAILASA Library/பகவத் கீதை விளக்கம் _ அத்தியாயம் 5_தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 5 - Tamil)/உணர்ச்சிகளால் அலைகழிக்கப்படாத நிலை கீருஷ்ண நிலைSign in
பகவத் கீதை விளக்கம் _ அத்தியாயம் 5_தமிழ் (Bhagavad Gita Explanation - Chapter 5 - Tamil)

உணர்ச்சிகளால் அலைகழிக்கப்படாத நிலை கீருஷ்ண நிலை

கிருஷ்ணர் மீண்டும் மீண்டும் பற்றில்லாமல் இருப்பதைப் பற்றிப் பேசுகிறார். கீதையில், இதுதான் தீர்வு காண்பதற்குக் கடினமான ஒரு விஷயமாகவும் புதிராகவும் இருக்கிறது. இங்கே 'பற்றில்லாமல் இருப்பது' என்பது 'துறத்தலை'க் குறிக்கிறது.

பற்றுகளைத் துறப்பதே உண்மையான துறவு!

நீங்கள் உங்களிடமுள்ள பொருள் சார்ந்த உலகின் உடைமைகளை எல்லாம் விட்டு விட்டு, ஒரு காட்டிற்கோ அல்லது ஆச்ரமத்திற்கோ சென்றுவிடலாம். ஆனால் மனம் இன்னமும் அந்த உடைமைகளைப் பற்றியே தொங்கிக் கொண்டிருக்குமேயானால், அங்கு துறவு நிகழவே இல்லை. அது உடலில் நிகழ்ந்திருக்கிறது. ஆனால் மனத்தில் நிகழவில்லை.

ஒருவர் இந்தப் பொருள் சார்ந்த உலகத்திலிருந்துகொண்டே, சுறுசுறுப்பாக அனைத்துக் கடமைகளையும் எதிர்நோக்காமல் பற்றற்று வாழ முடியும். பற்றுதல் இல்லாத செயல்பாடுதான் துறவு. இந்தத் துறவுதான் விடுதலைக்கு வழி வகுக்கும்.

அந்தத் தாமரை மலரைப் பாருங்கள், அது அசுத்தமான சேற்றில் வளர்கிறது. அதனுடைய தண்டுப்பகுதி முற்றிலுமாக அந்த சேற்றில் இருக்கிறது. ஆனாலும் அந்த மலர் மிகவும் அழகாக தண்ணீருக்கு மேலே இருந்து கொண்டிருக்கிறது. அது மிகவும் அழகாக இருக்கிறது. அதைப் பார்க்கும்பொழுது, நீங்கள் அந்த மலருடைய அழகைத்தான் பார்க்கிறீர்கள். அதைச் சுற்றியுள்ள அசுத்தத்தை நீங்கள் கண்டு கொள்வதில்லை.

அதேபோலத்தான் உலகியல் செயல்பாடுகளில் நீங்கள் முழு வீச்சாக ஈடுபட்டிருக்கும்பொழுது, என்ன நடந்தாலும் அதனால் எவ்வித பாதிப்பும் அடையாமல் இருக்கும்போதும், உங்களுடைய உள் மையம் அமைதியாக இருக்கும்போதும், நீங்கள் துறவு எனும் லட்சியத்தை அடைந்து விட்டீர்கள்.

ஒரு சின்ன கதை.

ஒரு குரு, அவருடைய சீடருடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அவர்கள் ஒரு நதிக்கரையை வந்தடைந்தார்கள். சீடர் கேட்டார், ''நாம் இப்பொழுது இந்த ஆற்றைக் கடக்கப் போகிறோமா குருவே ?''

'' ஆமாம். கடக்கப் போகிறோம். மிகவும் ஜாக்கிரதை, நீ உன் பாதங்களை நனையாமல் பார்த்துக்கொள்,'' என்று குரு பதிலளித்தார்.

சீடருக்கு குரு என்ன சொல்கிறார் என்று புரிந்துகொள்ள முடியவில்லை.

ஆன்மீகம் என்பதே வாழ்க்கை என்னும் பெருங்கடலைப் பாதங்கள் நனையாமல் கடப்பதைப் பற்றியதுதான் என்று குருநாதர் அவருக்குச் சொல்ல முயற்சி செய்து கொண்டிருந்தார்.

ஆன்மீகம் என்பது உலக விஷயங்களிலிருந்து ஓடிவிடுவது அல்ல. இதில் தெளிவாக இருங்கள்.

இராமகிருஷ்ண பரமஹம்ஸரின் நேரடியான சீடரான சுவாமி பிரம்மானந்தரின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம்.

ஒரு நாள் சுவாமி பிரம்மானந்தர் தியானம் செய்து கொண்டிருந்தார். ஒரு பக்தர் விலை உயர்ந்த கம்பளம் ஒன்றைக் காணிக்கையாக வைத்துவிட்டுச் சென்றார். பிரம்மானந்தர் எதுவும் சொல்லவில்லை. அவர் மிகவும் அமைதியாக என்ன நடக்கிறதென்று கவனித்துக் கொண்டிருந்தார்.

ஒரு இரண்டு மணி நேரம் கழித்து, ஒரு திருடன் அங்கே வந்தான். அந்தக் கம்பளத்தை நோட்டமிட்டவன், அதனை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான். அப்போதும் எந்தவிதமான உணர்வும் இல்லாமல், சுவாமி அதே முறையில் அமைதியாகக் கவனித்துக் கொண்டிருந்தார்.

இளைய சீடர்கள் சிலர், பக்தரால் கொடுக்கப்பட்ட விலை உயர்ந்த கம்பளம் திருடு போனதற்காக மிகுந்த மனக் கலக்கமடைந்தார்கள். இருந்த போதிலும், பிரம்மானந்தருக்குள் அது எந்த ஒரு வித்தியாசத்தையும் ஏற்படுத்தவில்லை.

THE SUPREME PONTIFF OF HINDUISM BHAGAWAN SRI NITHYANANDA PARAMASHIVAM இரமண மகரிஷியின் வாழ்க்கையில் நடந்த இன்னொரு சம்பவம்:

ஒரு நாள் இரமண மகரிஷியின் ஆச்ரமத்திற்குள் திருடர்கள் சிலர் நுழைந்தார்கள். அவர்கள் கண்ணில் பட்ட எல்லாவற்றையும் எந்த ஒரு சிறிய பொருளையும்விடாமல் எடுத்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல், போவதற்கு முன்பாக அவரையும் ஒரு அறை அறைந்து விட்டுப் போனார்கள்.

பகவான் செயலற்று இருந்தார். அந்தச் சம்பவத்தின்பொழுது அவர் மூச்சில்கூட எந்த ஒரு சிறிய மாற்றமும் ஏற்படவில்லை.

ஞானிகள், வெளி உலகில் நடக்கிற எந்த ஒரு சம்பவத்தையும் அவர்களுடைய உள் மையத்தைப் பாதிக்க அனுமதிப்பதில்லை.

இப்படிப்பட்ட தம்மை உணர்ந்த ஞானிகள், வெளி உலகில் நடக்கிற எந்த ஒரு சம்பவத்தையும் அவர்களுடைய உள் மையத்தைப் பாதிக்க அனுமதிப்பதில்லை, தங்களுடைய மெய்யிலேயே ஆனந்தமாக இருக்கிறார்கள்.

நாமும் இந்த மாதிரியாக மாற முடியும். அப்பொழுது இந்த வெளி உலகச் சம்பவங்களை நம் உட்செல்ல நாம் அனுமதிக்க மாட்டோம். நாம் இந்த உணர்ச்சிகளின் ஊசலாட்டத்திலும், ஆசை மற்றும் அச்சத்தின் அலைக்கழிப்பிலும் சிக்கிக் கொள்ளமாட்டோம்.