மகிழ்ச்சியா ? போராட்டமா ? தேர்ந்தெடுப்பது நீங்களே!
நான் சரணாகதி என்று சொல்லும்போது, நீங்கள் கடலில்தான் இருக்கிறீர்கள் வேண்டும் என்பதையே குறிப்பிடுகிறேன். நீங்கள் பிறக்கும்பொழுதும், நீங்கள் உங்களை ஒரு தனி மனிதர் என்று நினைக்கும்பொழுதும், நீங்கள் ஜ்ஞானம் அடையும்பொழுதும், எப்பொழுதாயினும் நீங்கள் அந்தக் கடலிலேயேதான் இருக்கிறீர்கள். விழித்துக்கொள்ளுங்கள், அவ்வளவுகான்!
இந்த இறுதி ஸத்யத்திற்கு விழித்துக்கொள்வதே சரணாகதி.
உங்களைப் பற்றிய குறைவான கருத்துகளையெல்லாம் உண்மைக்குச் சரணாகதி செய்யுங்கள். இதன் விளைவாக, உங்களின் உள் உலகில், உங்களின் உள் விழிப்புணர்வில் தானாகவே சரணாகதி நிகழும். இல்லாவிடில், நீங்கள் 'சரணாகதி என்னும் சொல்லை வைத்துக் கொண்டு வெறுமனே விளையாடுவீர்கள். வாய்ஜாலம் பேசுவீர்கள்.
நீங்கள் கடவுள் என்பதைத் தவிர, நீங்கள் உங்களைப் பற்றி எப்படிப்பட்ட மதிப்பீட்டை வைத்திருந்தாலும், அது உங்களைப் பற்றிய ஒரு குறைமதிப்பீடே!
பொதுவாக நாம் நம்மை வரையறுக்கும் வார்த்தைகளைக்கொண்டு நம்மை வரையறுக்கிறோம். ஆனால், நாம் இந்த விவரிப்புக்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள் என்பதை, நாம் அறிவதில்லை.
ஒரு நாள் பக்தரொருவர் என்முன் தன்னைப்பற்றிப் பெருமையாகப் பேசிக்கொண்டிருந்தார். அவர் அங்கிருந்து சென்ற பிறகு, நான் என் சீடரிடம், ''அவர் தாழ்வுமனப்பான்மையால் பாதிக்கப்பட்டுள்ளார்,'' என்றேன். என் சீடரோ மிகவும் குழம்பிவிட்டார். "ஸ்வாமிஜி, அவர் தன்னைப் பற்றி மிகப் பெருமையாகப் பேசுகிறார். அது எப்படித் தாழ்வு மனப்பான்மையாகும்?' என்று என்னிடம் கேட்டார். நான் சொன்னேன், ''புரிந்துகொள், நாம் ஒவ்வொருவருமே கடவுள்தான். அதனால் அதைத் தவிர, நம்மைப் பற்றி என்ன சொன்னாலும், அது குறைவுதான், அதுவும் ஒரு தாழ்வுமனப்பான்மைதான், '' என்றேன்!
நீங்கள் கடவுள் என்பதைத் தவிர, நீங்கள் உங்களைப் பற்றி எப்படிப்பட்ட மதிப்பீட்டை வைத்திருந்தாலும், அது உங்களைப் பற்றிய ஒரு குறைமதிப்பீடே, நீங்கள் தாழ்வுமனப்பான்மையால் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்! உங்களைப் பற்றிய உங்கள் கருத்துகளையெல்லாம் விட்டுவிடுங்கள். நீங்கள் கடல்தான் என்ற உண்மைக்கு விழித்துக்கொள்ளுங்கள்.
சில மீன்கள், ஆற்றின் நீரோட்டத்தோடு நீந்தும்; சில, நீரோட்டத்தை எதிர்த்து நீந்தும். அவை ஆற்றின் போக்கில் போனாலும் அல்லது எதிர்த்துப் போனாலும், எல்லா மீன்களும் அந்த ஆற்றில்தான் இருக்கின்றன. பிரபஞ்ச இருப்பின் போக்கோடு இசைந்துபோனாலும் அல்லது எதிர்த்துப் போராடினாலும், நீங்கள் அதனோடுதான் ஒன்றியிருக்கிறீர்கள்.
நீங்கள் கடவுள் என்பதை உணர்ந்திருக்கிறீர்களோ இல்லையோ, நீங்கள் கடவுள்தான். இதில் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இல்லை. அங்கு இருப்பது ஒரேயொரு வாய்ப்புதான். ஒன்று, நீங்கள் கடவுள் என்பதை உணர்ந்து மகிழுங்கள், அல்லது போராடிக் கொண்டும் கஷ்டப்பட்டுக் கொண்டும் வாழ்க்கையைத் தொடருங்கள், அவ்வளவுதான்!
நீங்கள் உங்களைச் சுற்றி எவ்வளவு பலம்வாய்ந்த வேலிகளை அமைத்தாலும், அதாவது அதிகமான நீர்க்குமிழிகளை உங்களைச் சுற்றி சேர்த்துக் கொண்டாலும், நீங்கள், அலைகளை உங்கள் எல்லைக்குள் வர வேண்டாமென சொல்ல முடியுமா? நீங்கள் எதைச் செய்தாலும், அது, ஒருசில நிமிடங்களே நீடிக்கும் நாடகந்தான்!