பகவத்கீதை விளக்கம் (Bhagavad Gita Explanation)
செயல்களின் அங்கங்கள்
- 18.18 அறிவு, அறிபவர், அறியப்படும் பொருள் இம் மூன்றும்தான் செயலைத்தூண்டும் காரணிகள். புலன்கள், செயல், செய்பவர் இந்த மூன்றும் செயலின் மூன்று பகுதிகளாகும்.
- 18.19 செய்பவர் - இம்மூன்றிலும் தலா மூன்று வகைகள் உள்ளன. அவற்றை விவரிக்கிறேன், கேள்.
- 18.20 எல்லா இருப்புகளுக்குள் இருக்கும் அழிவற்ற அத்வைதத்தை, பிரிவுகளுக்குள் இருக்கும் பிரிவுபடாத ஒருமைத்துவத்தைக் காணும் அறிவு ஸாத்வீக நிலை அறிவு எனப்படுகிறது.
- 18.21 ஜீவன்களின் வெவ்வேறு இயல்புகளைக் காண்பதன்மூலம், அவற்றை ஒன்றினின்று ஒன்றை வெவ்வேறாகப் பிரித்துக் காண்கிற அறிவு ராஜஸ நிலை அறிவு எனப்படுகிறது.
- 18.22 ஏதோ ஒன்றை மட்டும் பிடித்துக்கொண்டு, அது மட்டுமே உண்மையென்று சொல்லிக்கொண்டிருக்கும் பகுத்தறிவுக்கு ஒவ்வாத, அடித்தளமற்ற, அற்பமான அறிவு தாமஸ நிலை அறிவு எனப்படுகிறது.
- 18.23 ஒருவன், தனக்கென விதிக்கப்பட்ட கர்மங்களை கர்மபலனில் பற்றுவைக்காமலும், எந்தவித விருப்பு வெறுப்பின்றியும் செய்யும்போது, அது ஸாத்விக கர்மமாகிறது.
- 18.24அஹங்காரத்துடனும், சுயநல நோக்கோடும், பெருமுயற்சியுடனும் செய்யப்படும் கர்மம் ராஜஸ கர்மம் எனப்படுகிறது.
- 18.25 செயலின் விளைவையும், பிறருக்கு ஏற்படும் துன்பத்தையும் நஷ்டத்தையும், தம் செயல்திறனையும் எண்ணிப்பாராது, மயக்கத்தால் எக் கர்மம் செய்யப்படுகிறதோ, அது தாமஸத்திலிருந்து விளைந்த கர்மம் எனப்படுகிறது.
- 18.26 பற்றற்றவனாகவும், அஹங்காரமற்றவனாகவும், உறுதியும் ஊக்கமும் நிலைமாறாதவனாகவும் இருக்கின்ற அந்த கர்த்தா ஸாத்விகன் எனப்படுகிறான்.
- 18.27 பற்றுடன் கூடியவனும், செயலின் பயனை விரும்புபவனும், பேராசையுள்ளவனும், பொருளைப் பற்றிக்கொண்டவனும், தூய்மையற்ற நடத்தையுள்ளவனும், மகிழ்ச்சியாலும் துயரத்தாலும் பாதிக்கப்படுபவனுமாகிய இத்தகைய கர்த்தா ராஜஸன் என்று அழைக்கப்படுகிறான்.
- 18.28 ஒழுக்கமற்றவனும், அறிவிலியும், முரட்டுத்தனமுடையோனும், கொடூரனும், வஞ்சகனும், பிறருடைய வாழ்க்கையைக் கெடுப்பவனும், கவலை கொண்டவனும், சோம்பேறியும், காலம் கடத்துபவனுமான கர்த்தா தாமஸன் என்று சொல்லப்படுகிறான்.
கிருஷ்ணர், இந்த ஸ்லோகங்களில் மனிதனின் இயல்புகளை விளக்குகிறார்.
கிருஷ்ணர் முன்னரே சொல்லியிருக்கிறார். இறுதியாகச் செயல் புரிபவன் நர - மனிதன் அல்ல, நூறாயண - இறைவனே! ஆனாலும் மனிதனே செயல்கள் வெளிப்படுவதற்கான ஒரு ஊடகமாக இருக்கிறான்.