கேள்வி: ஸ்வாமிஜி, என் சாரத்தை நன்கு புரிந்துகொண்ட ஒருவர் என்னுடன் ஐக்கியமாகிவிடுகிறார். அதுவே பக்தி, என்று கிருஷ்ணர் சொல்கிறார். ஞானம் எப்படி பக்தியாக முடியும்?
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், பக்தியும், ஞானமும் வேறு வேறு அல்ல. பக்தி எங்கிருக்கிறதோ, அங்கு ஞானமும் இருக்கும். உண்மையான ஞானம் எங்கிருக்கிறதோ அங்கு பக்தியும் இருக்கும்.
கிருஷ்ணர், ஞானம் என்று சொல்லும்போது, வெறும் பயனற்ற பட்டறிவைப் பற்றிக் குறிப்பிடவில்லை; அது வெறும் நூலறிவாக இருந்தாலுமே, வறட்டுப் பட்டறிவாக இருக்குமேயானால், அது ஞானம் அல்ல.
ஆயிரக்கணக்கான நூலறிஞர்களும், தத்துவவாதிகளும், பகவத்கீதையை வார்த்தைக்கு வார்த்தை ஆராய்ச்சி செய்துகொண்டும், அதை மற்ற வேதங்களோடு ஒப்பிட்டுக் கொண்டும், தங்களுடைய நேரத்தையும் மற்றவர்களின் நேரத்தையும் வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் என்ன பயன்? இது, ஒரு நோக்கமும் அற்ற, முட்டாள்தனமான ஒரு செயலை அதிகப்படுத்துவதற்கே உதவுகிறது.
கீதையினுடைய மொத்த நோக்கமே, உங்கள் அஹங்காரத்தை விட்டுவிட, உங்களுக்கு உதவுவதுதான்.
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், கீதையின் ஒரு ஸ்லோகத்தையாவது, கிருஷ்ணருடைய ஒரு வாசகத்தையாவது நன்கு, முழுமையாகப் புரிந்துகொள்வதுதான். உங்களை ஞானமடையச் செய்ய அது போதும். ஒரு கைப்பிடியளவுள்ள மண்ணைப் பற்றிய படிப்பு, இந்தப் பூவுலகில் உள்ள எல்லா மண்ணைப் பற்றியும் உங்களுக்குக் கற்பித்துவிடும் என்று சுவாமி விவேகானந்தர் சொல்வதன் பொருள் இதுவே. ஆகவே, உங்களுக்குத் தேவையானதெல்லாம் ஞானத்தின் ஆழம் தான், அகலம் அல்ல.
கீதையினுடைய ஒவ்வொரு சொல்லும், கிருஷ்ணருடைய ஒவ்வொரு சொல்லுமே சக்திதான். இந்த அறிவைத்தான் நீங்கள் உள்வாங்கிக்கொள்ள வேண்டும். அந்த சக்தியைத்தான் நீங்கள் அனுபவமாக்கிக்கொள்ள வேண்டும். இதையே கிருஷ்ணர் 'அறிதல்' என்று குறிப்பிடுகிறார். இந்த சக்தியைப் பற்றி நீங்கள் 'அறிந்து கொள்ளும்' தருணம், நீங்கள் சக்தியை அடையப் பெறுவீர்கள்; கிருஷ்ணராகவே ஆகிவிடுவீர்கள். நீங்கள் கிருஷ்ணருடைய பக்தராக மட்டும் அல்ல, கிருஷ்ணராகவே ஆகிவிடுவீர்கள்.
உண்மையைத் தெளிவாக 'அறிந்துகொள்ள' இரண்டு பாதைகள் உள்ளன. அதில் ஒரு பாதை, குருவிடம் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையில் உங்களுக்கு எந்தவித சந்தேகமும் இல்லாமலிருப்பது. நீங்களும் குருவைப் போலவே அதே விழிப்புணர்வுதான் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. நீங்கள் இதை அறிந்துகொண்ட கணமே அங்கு இரண்டு என்ற பேச்சுக்கே இடமில்லை. நீங்களும் குருவும் ஒன்றே. இதுவே பக்தியின் உச்சம்.
மற்றொரு பாதை, உங்களுக்குள் நிகழும் ஆழமான சரணாகதி, உங்களுக்குள்ளே உதயமாகும் அப்பழுக்கற்ற அன்பு மூலமாக குருவோடு இணைந்துவிடுவது. இந்த இணைப்பின் மூலமாக, நீங்கள் வேறானவர் அல்ல என்னும் ஞானம் வருகிறது. தெளிவான பக்தியிலிருந்து ஞானம் பிறக்கிறது.
வேத நூலறிவாக இருந்தாலுமே, வறட்டுப் பட்டறிவாக இருக்குமேயானால், அது ஞானம் அல்ல. உண்மை என்னவென்றால், இரண்டுமே ஒரே நேரத்தில் நிகழ்கின்றன. மீராவுக்கு, தாம் கிருஷ்ணரோடு ஒன்றாகக் கலந்திருப்பது தெரியாது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? தாம் எதை அருந்தினாலும், அது, தம்முடைய இறைவனும், குருவுமாகிய கிருஷ்ணராலுமே அருந்தப்பட்டதாகும் என்பதை அறியாமலா அவர் அந்த விஷத்தை அருந்தியிருப்பார்?
தேவியைத் தரிசித்து, லௌர்தாய லூரி ஸ்லோகங்களைப் பாடிய சங்கரர் வெறும் வறட்டுத் தத்துவவாதி என்று நினைக்கிறீர்களா? இதுவரை உலகம் கண்டறியாத சிறந்த தத்துவவாதியான சங்கரா, தேவியின் முன் பக்தியினால் உருகிக் கரைந்தார்.
தெய்விகத்தை அணுகுவதற்கு உதவும் த்வைதம், விசிஷ்டாத்வைதம், அத்வைதம் என்னும் மூன்று வழிமுறைகளைப் பற்றிய வாதங்களைத் தத்துவவாதிகளிடமே விட்டுவிடலாம்.
நீங்கள் அந்தப் பிரபஞ்ச சக்திக்கு உங்களைத் திறந்துவைத்திருந்தாலும், இன்னமும் உங்களை அதனினும் வேறானவர் என்று உணர்ந்துகொண்டிருக்கும்போது த்வைதம் - இருமை நிகழ்கிறது. நீங்கள் உங்களை மூடிக்கொள்ளும்பொழுது, மாபெரும் கடலின் ஒரு துளிதான் நீங்கள் என்பதை ஒப்புக்கொள்வதில்லை. கடலினின்று வேறானவர் என்றே நீங்கள் உங்களை உணர்கிறீர்கள். இந்த நிலையை அடைவதற்கு, நீங்கள் திறந்த மனத்தவராய் இருக்க வேண்டும். இந்தத் துவைதமே முதல் படி.
அடுத்த நிலையில், நீங்கள் திறந்த மனத்துடன் இருப்பதுடன், அணுகக் கூடியவராயும் மாறுகிறீர்கள். அதாவது உங்களைச் சுற்றி ஒரு மாபெரும் சக்திக் களம் சூழ்ந்துள்ளது என்பதையும், நீங்கள் அதன் ஒரு சிறு பகுதிதான் என்பதையும் உணர்கிறீர்கள். நீங்கள் முழுமையின் ஒரு பகுதியே என்பதையும், நீங்கள், ஒரு நீர்த்துளி என்ற முறையில், நீங்கள் கடலின் ஒரு பகுதியே என்பதையும் அறிந்துகொள்கிறீர்கள். இதுவே விசிஷ்டாத்வைதம் எனப்படுகிறது.
பிறகு சட்டென ஒருநாள், 'அந்தக் கடலே நீங்கள்தான்' என்பதை நீங்கள் உணர்ந்துகொள்கிறீர்கள். உங்களுக்கும், அந்த சக்திக்கும் நடுவில் எந்தவித வித்தியாசமோ, தடையோ இல்லை. நீங்கள்தான் அந்த சக்தி. நீங்களே கடவுள். இதுவே அத்வைதம் - இரண்டற்ற தன்மை. அங்கு 'நீங்கள் இருக்கிறீர்கள்', அவ்வளவு தான்.
திறந்த மனத்தினராயிருப்பதிலிருந்து, அணுகக் கூடியவராய் மாறி, பிறகு 'நீங்கள் இருக்கிறீர்கள்' என்ற நிலைக்குப் படிப்படியாக உயர்கிறீர்கள்.
நீங்கள் கிருஷ்ணரை அறிந்துகொண்டால், இனி அறிந்துகொள்வதற்கு ஒன்றுமே இல்லை, பின்பு, நீங்களே கிருஷ்ணராகிவிடுகிறீர்கள்.
ஸம்ஸ்காரங்களே உங்களை இயக்குகின்றன
\- 18.59 உன்னுடைய அஹங்காரத்தின் காரணமாக, 'நான் போர்புரியேன்' என்று நீ தீர்மானித்தால், உன்னுடைய தீர்மானம் பயனற்றது. உன்னுடைய இயல்பான குணமே உன்னைப் போரில் ஈடுபடுத்திவிடும்.
\- 18.60 குந்தி புத்திரா, உன்னுடைய இயல்பான மனப்பாங்குகளினால் கட்டுப்படுத்தப்படுபவனாய் இருக்கிறாய். மதிமயக்கத்தின் காரணமாக நீ செய்ய வேண்டாமென்று தீர்மானித்த செயலை, அது உன்னுடைய விருப்பத்திற்கு மாறாக இருந்தாலுங்கூட, செய்தே தீருவாய்!
\- 18.61 ஒவ்வொருவருடைய இதயத்திலும் வீற்றிருக்கின்ற பரமாத்மா எல்லா ஜீவன்களின் செயல்களையும் வழிநடத்துகிறான். அவனுடைய மாயா சக்தியின் முன் அனைத்துமே இயந்திரங்களைப்போல செயல்புரிகின்றன.