துடிப்புகள் பலவிதம்
வளரும் நாடுகள் சாதிக்கத் துடிக்கின்றன. வளர்ந்த நாடுகள் சாதித்தும் துடிக்கின்றன. சாதனையின் உச்சியில் இருக்கும் அமெரிக்காவில் மூன்றில் ஒருவர் ஏதாவது ஒரு மனநோயால் பாதிக்கப்பட்டு வேதனைப் படுகிறார்கள். வெறும் சாதனை மாத்திரமே சந்தோஷத்தையும், திருப்தியையும் தருமென்றால் அமெரிக்காவில் மனநோயாளியே இருக்கக் கூடாது. ஏனென்றால், அடிப்படை வசதிகள் அனைத்தும் தாண்டி பல சாதனைகள் புரிந்த மக்கள் நிறைந்த நாடு அது.
- எதையாவது சாதிக்க ஆரம்பித்து, சாதித்தபின், அந்த சாதனைக்கும் உங்களின் ஆழ்மனதின் விருப்பத்திற்கும் சம்பந்தமே இல்லை என்றால் சாதனையே வேதனையாகி விடும்.
- சாதிக்க துடிப்பது, சாதித்தும் துடிப்பது எது பரிதாபத்திற்குரியது ? யோசியுங்கள். யோசனை தரும் ஆர்வத்தோடு கட்டுரையைத் தொடருங்கள் ...
வாழ்க்கையை ஜெயித்துக் காட்டுங்கள்!
சாதனையின் ரகசியம், இந்த மூன்று வார்த்தைகளுக்குள் ஒளிந்து கொண்டிருக்கிறது. - அது நம்பிக்கை, ஒழுக்கம், உற்சாகம். நம்பிக்கை, உற்சாகம் என்ற இரண்டும் சாதிப்பவனுக்கு அவசியம் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. ஆனால், ஒழுக்கம் அவசியமென்பது பலருக்கும் தெரியாத ஒன்று. 'தனிமனித ஒழுக்கம் வேறு. சமுதாய ஒழுக்கம் வேறு' - நான் அவசியம் என்று கூறுவது தனி மனித ஒழுக்கத்தை. சாதிப்பவனை அவன் பாதையிலிருந்து சற்றுக்கூட தடுமாறாமல் காப்பாற்றும் சக்தி படைத்தது தனி மனித ஒழுக்கம்.
'நம்பிக்கை', 'ஒழுக்கம்', 'உற்சாகம்' ஆகியவற்றின் கூட்டு வெளிப்பாடே சாதனை! ஒழுக்கம் இருந்து, நம்பிக்கையும், உற்சாகமும் மிகுந்தால் அந்த மனிதனின் சாதனை - பக்கக் கண்ணாடி போடப்பட்ட குதிரையின் ஸ்திரமான ஓட்டம்போல இருக்கும் எடுத்த இலக்கை அடையலாம். வழி தவற மாட்டார்கள். வெறும் நம்பிக்கையும் உற்சாகமும் இருந்து ஒழுக்கம் இல்லாதிருந்தால் அது காட்டுக் குதிரை போலத்தான் மனிதனை ஆட்டிப்படைக்கும். இந்த நிலையில் மனிதன் வழிதவற வாய்ப்பு அதிகம். வெறும் ஒழுக்கம் மட்டுமே கடைப்பிடித்து நம்பிக்கையும், உற்சாகமும் மிகக்
குறைவாகக் கொண்டிருந்தால் அது மனிதனை ஒரு கிழட்டுக் குதிரைபோல ஆக்கி விடும். வாழ்க்கையில் மந்தம் மாத்திரமே மிஞ்சும்.
- உங்களின் ஓட்டம் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள் ?
கிழட்டுக் குதிரையின் ஓட்டமா ? காட்டுக் குதிரையின் ஓட்டமா ? ஜெயிக்கும் குதிரையின் ஓட்டமா ? ஒழுக்கம், நம்பிக்கை, உற்சாகம் மிகுந்து வெளிப்பட்டால் ஜெயம் உறுதி. வாழ்க்கையை ஜெயித்துக் காட்டுங்கள்!