வயப்படாததையும் வயப்படவைக்கும் வசியக்கலை!
- பாத்திரம் கழுவுவதில் இருந்து... ஷூ பாலிஷ் செய்வது வரை ... குழந்தைக்கு தலை வாருவதில் இருந்து... தொழில் செய்யும் திறமை வரை... என வாழ்வின் ஒவ்வொரு செயலிலும் கலைநயத்தைக் கொண்டுவரலாம்.
- கலைநயம் சேரச் சேர உங்களிடமிருந்து காந்த சக்தி வெளிப்படும். அது எல்லாவித வெற்றி வாய்ப்புகளையும் உங்களை நோக்கி ஈர்க்கும்.
- வாழும் கலையின் நயத்தை நயம்படக் கற்றுக் கொண்டால், வயப்படாததைக் கூட வயப்படுத்திவிடலாம். இப்போது செய்யும் செயலை இன்னும் சிறப்பாகச் செய்யுங்கள். அதில் இன்னும் கொஞ்சம் சுவராஸ்யம் சேருங்கள். கலைநயம் தானாய் வெளிப்படும். கலை உணர்வோடு ஒவ்வொரு செயலையும் செய்ய ஆரம்பித்தால், சந்தோஷத்திலிருந்து ... திருப்திவரை நம் சுயம் விரும்பும் எல்லாவற்றையும் வசப்படுத்தி விடலாம்.
வாழ்க்கையை அனுபவியுங்கள்!
- இந்த வாழ்க்கையை அனுபவி என்று இறைவன் நமக்குப் பரிசாகக் கொடுத்த ஆனந்த சக்தியைப் பயன்படுத்தாமல் இருப்பது - சுயபாதகச் செயல்.
- பணம், பதவி, பேருக்காக நீங்கள் செலவழிப்பது எதை ? - உடல், உயிர், மனதை! எந்த நிமிடம் வேண்டுமானாலும் கைமாறத் தயாராக இருக்கும் பணம், பணம், பதவி, பேருக்காக இந்த நிமிடம் உங்களோடிருக்கும் உடல், உயிர், மனதை பாழாக்குவது எந்த வகையில் நியாயம். கொஞ்சம் யோசியுங்களேன்!
- வாழ்க்கையை வீணடிப்பது ... ஒரு மகாபாவம்! ஒரு கொடுஞ்செயல் ! ஒரு பெருங்குற்றம் !
- 'இந்த நிமிடத்தில் என்னிடம் உள்ளதே இந்த நிமிடத்தை அனுபவிப்பது போதும்' - என்று தன்னையும் தன் சூழ்நிலையையும் அனுபவித்து வாழ்பவனுக்கு மட்டுமே ஆனந்தமும், திருப்தியும் சொந்தம்.
- இந்தப் புத்தகத்தைப் படிக்கும் அளவுக்கு நேரமும், பணமும் பெற்ற நீங்கள்... நிச்சயம் பிச்சைக்காரராக இருக்க முடியாது.
- வாழ்க்கையை அனுபவித்து வாழத் தெரிந்திருந்தால், பிச்சைக்காரனால்கூட சொர்க்கத்தை உணர்வது சாத்தியம் என்றால், ஏன் உங்களால் முடியாது? உங்களையும், உங்கள் சூழ்நிலைகளையும் மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள், சொர்க்கம் உங்களுக்குள்ளே ... என்று கண்டுகொள்வீர்கள்.
- வாழ்க்கையே ஒரு பெரிய தொடர் திருவிழா! வாழ்க்கையை அனுபவித்து வாழுங்கள்!
நீங்கள் வாழ கற்றுக்கொள்வதற்காக ...
ஞானகுருவால்கூட ஒருவனுக்கு புத்திசாலித்தனத்தைக் கற்றுக்கொடுக்க முடியாது. ஒவ்வொரு தனி மனிதனும் தானே கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு சாதனைதான் புத்திசாலித்தனம்.
அதிகபட்சம்
ஒரு மனிதன் புத்திசாலித்தனத்தைக் கற்றுக் கொள்வதற்கான சூழ்நிலையையும், உத்வேகத்தையும் ஒரு குருவால் உருவாக்க முடியும். அவ்வளவே.
- இதனால் ஜே.கிருஷ்ணமூர்த்தி ஒரே ஒரு வரியில் சொல்லி முடித்து விட்டார், 'Master is not needed' - குரு தேவையில்லை. ஆம், வாழ்க்கையைக் கொண்டாட புத்திசாலித்தனத்தை கற்றுக்கொள்ள ஒருவருக்குக் குரு தேவையில்லைதான்.
- ஆனால் ஒரு நிமிடம் யோசியுங்கள்! புத்திசாலித்தனத்தை நீங்களே கற்றுக் கொள்ளும் சூழலையும், உத்வேகத்தையும் யார் உங்களுக்காக உருவாக்குவது ? உங்களுக்கு நீங்களே தான் அதை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இது எல்லோருக்கும் எளிமையாகச் சாத்தியப்படக் கூடிய காரியமல்ல.
- புத்திசாலித்தனத்தைக் கற்றுக்கொள்ளும் சாத்தியக் கூறுகளை உருவாக்குவது கடினம் என்று எண்ணுபவர்களுக்காகவே, புத்தரிலிருந்து ... ஜே.கிருஷ்ணமூர்த்தி வரை தொடர்ந்து எல்லா ஞான குருமார்களும் தியான, ஞான சொற்பொழிவுகளையும், தியான சத்சங்கங்களையும் நடத்தி வருகிறார்கள்.
- வாழும் ஞானியைச் சந்திப்பது ... அவரின் தியான சத்சங்கங்களில் கலந்து கொள்வது ...
இவை அனைத்தும் புத்திசாலித்தனத்தை நீங்கள் கற்றுக் கொள்ள உதவும் சாத்தியக்கூறுகளை அதிகப்படுத்தும்.
இவற்றால் ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையைக் கொண்டாட வேண்டும் என்ற ஞானகுருமார்களின் கருணை நோக்கம் முழுழப் பலன் பெறும். புத்திசாலித்தனத்தைக் கற்றுக் கொள்ளுங்கள்!
தெரிந்துகொள்ள வேண்டிய தெரியாதவைகள்
- உண்மையில், நிஜத்தில் ஒரு மனிதனைப் புரிந்து கொள்வது என்பது இமாலய சாதனை!
- உங்களை முழுமையாகத் தெரிந்துகொண்ட, புரிந்துகொண்ட ஒருவரையாவது சந்தித்திருக்கிறீர்களா ? இதுவரை சந்திக்கவில்லை என்றால்... இதுதான் நிஜத்தின் நிழல். உண்மையின் உரு. ஒரு ஜென் ஞானியின் சுருக்கமான கூற்று இதை நாம் புரிந்து கொள்ள உதவும். உன்னைப் புரிந்து கொள்ள வேண்டுமா ? -உலகைப் புரிந்து கொள்! உலகைப் புரிந்து கொள்ள வேண்டுமா ? -உன்னைப் புரிந்து கொள்!
- உங்களையும், மனிதர்களையும் பற்றிய பிரமிப்புகள் தெரிய ஆரம்பித்தாலே 'பிரம்மாண்டத்தின் (இறைசக்தியின்) வெளிப்பாடுகள் பற்றி நாம் தெரிந்துகொண்டது எவ்வளவு?' என்று புரிய வரும். கடலுக்கும் ஒரு துளி நீருக்கும் உள்ள வித்தியாசம்தான் அது என்று புரிய வரும்.
- சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் 'நமக்குத் தெரியாது' என்கிற விஷயமாவது நமக்குத் தெரிந்தால், குறைந்தது 'நமக்குத் தெரியாது' என்கிற விஷயமாவது நமக்குத் தெரியவரும். 'நமக்குத் தெரியாது' என்கிற விஷயம்கூட நமக்குத் தெரியாதவரை 'நமக்குத் தெரியாது' என்கிற விஷயம் நமக்குத் தெரியவே தெரியாது.
- 'நமக்கு என்ன தெரியும்' என்ற தெளிவுக்கு வந்து விட்டால், நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அத்தியாவசியமான விஷயங்களைத் தெரிந்து கொள்ளத் தகுதி பெற்றுவிடுவோம். தெரிந்து கொள்ள ஆரம்பியுங்கள் ...
தவறுகள் தவறட்டும்
- தவறு செய்வது தவறு இல்லை. காரணம், தவிர்க்க முடியாதது தவறு. செய்த தவறையே திரும்பத் திரும்ப செய்வதுதான் தவறு.
- இரண்டுவிதமாக மனிதர்களை நாம் பார்க்கலாம் :
- எல்லாருமே பாவிகள்.
- எல்லோருமே புனிதர்கள்.
- பாவம், புனிதம் என்பது இடத்துக்கு இடம், மதத்துக்கு மதம் மாறக்கூடியது. ஏன் ? பாவம், புனிதம் பற்றிய வரையறைகள், மதங்களுக்குள் இருக்கும் உப பிரிவுகளுக்குள்ளேயே மாறக் கூடியது.
- பழைய தவறுகளை நினைத்து... நீங்களும் கஷ்டப்படாதீர்கள். மற்றவர்களையும் கஷ்டப்படுத்தாதீர்கள்.
- உங்களையும் மற்றவரையும் வருத்தும் தவறுகள் தவறட்டும் ஆனந்தம் வாழ்வில் கொட்டடட்டும்.
சாதனையைப் பகுப்பாய்வு செய்யுங்கள்
- ஏன் ? எதற்கு ? என்ற அடிப்படை பகுப்பாய்வு செய்யாமல் 'தானும் சாதித்தே ஆகவேண்டும்' என்று வாழ்க்கை ஒட்டத்தை ஆரம்பிக்கிறான். ஒவ்வொரு இளைஞனும்! ஓட்டம் கொஞ்ச நாளிலேயே வெறியாக மாறி விடுகிறது.
இங்குதான் பிரச்சினை ஆரம்பிக்கிறது. வாழ்க்கை திசை மாறிப்போகிறது.
சாதனை தவறு என்று சொல்லவில்லை. சாதனை தேவை. ஒவ்வொரு இளைஞனும் தன் வாழ்வில் நிச்சயம் சாதிக்க வேண்டும். சோம்பேறியாக வாழ்க்கையை வீணடித்துவிடக்கூடாது.
ஆனால், சாதனை என்ற விஷயத்தில் ... எதைச் சாதிக்க வேண்டும் ? ஏன் சாதிக்க வேண்டும் ? - என்ற தெளிவு பிறக்கும் முன்பே, எப்படி சாதிப்பது ? என்ற ரீதியில் செயல்படும்போதுதான் பிரச்சினை ஆரம்பிக்கிறது.
- ஏன் ? எதற்கு ? என்ற தெளிவில்லாமல் சாதிக்கத் துடிக்கும் போதுதான் 'எப்படியாவது!, எதையாவது சாதித்தே ஆக வேண்டும்' என்ற மன வெறி கிளம்புகிறது. கண் எதிரே இருக்கும் பணம், பேர், பதவி, அறிவு என்ற ஏதாவது ஒன்றை மனம் பற்றிக் கொள்கிறது. மொத்த வாழ்வும் திசை திரும்பி விடுகிறது.
எதையாவது சாதிப்பதால், சாதித்த திருப்தி கிடைத்து விடாது. சாதனைக்கும் திருப்திக்கும் நேரடியாக எந்த சம்பந்தமுமில்லை. எனவே சாதிக்கச் செயல்படும் முன் சாதனை பகுப்பாய்வை கட்டாயம் செய்ய வேண்டும்.
செயல் சிறியது... பலன் பெரியது!
- பணி நிமித்தமாக, படிப்பு நிமித்தமாக, வாய்ப்பு நிமித்தமாக, உதவி நிமித்தமாக நாம் எல்லோரும் பலமுறை பலரிடம் பவ்யமான இனிமையான உடல் மொழிகளை வெளிப்படுத்தித்தான் நம் காரியங்களை சாதித்திருப்போம்.
- சாதாரண காரியத்திற்காக, யாரோ ஒருவருக்காக, நம்மையும் நம் பாவனைகளையும் இவ்வளவு தூரம் மாற்றி வளைக்க முடியும்போது - நாம் முழுமையாக நேசிக்கும் நம்முடைய சில உறவுகளுக்காக நம்மை நாம் ஏன் மாற்றிக் கொள்ளக் கூடாது ? .
- இதுவரை நமக்கு நெருங்கியவரிடம் உடல் மொழியால் உண்மையான பவ்யத்தை வெளிப்படுத்தாவிட்டாலும், இனியாவது வெளிப்படுத்தலாம். இந்த சிறு செயலால் உங்களுக்கு கிடைக்கப்போகும் பலன் மிக மிகப் பெரியது.
- நம் உடல் மொழியில் இனிமையைச் சேர்த்து மற்றவரையும் இன்புற வைப்பதென்பது பெரிய கம்ப சூத்திரமில்லை. 'உடல் மொழியில்' - மனித உறவிலும், அன்பின் பூரணத்துவத்திலும், திருப்தியிலும் எவ்வளவு பங்கு வகிக்கின்றது என்பதை ஆழமாகப் புரிந்துகொண்டு, 'உடல் மொழி' இனிமைகளைச் சேருங்கள். அதுபோதும். சேர்ந்து வாழும் வாழ்க்கை முறையின் ஆனந்த சூத்திரம் புரிந்து விடும்.
நிஜ சுற்றுலா
- 'நம் உள்ளே ... ஏழு கடல் -ஏழு மலை -ஏழு வானம் -இருக்கின்றது' என சொல்லப்படுவது பொய்யல்ல, மெய். மெய்யைத் தாண்டிய மெய் உணர்வு நிலையில் ... இவையும் இவை தாண்டியவையும் நம்முள்ளேதான் ஒளிந்திருக்கிறது. உள்ளே ஒரு முறையாவது உள்ளுணர்வுப் பயணம் செய்து பார்க்காத வரை,இவையெல்லாம் பொய்யாகத்தான் தோன்றும். மனம் நம்ப அனுமதிக்காது.