Lines of Wisdom Which Makes You Beautiful - Part 1
ருசித்தல்
- 'விழிப்புணர்வோடு இரசித்து ஈடும்படும்போது ருசித்தல் ஒரு தியானம்'. ஆனால், நூற்றுக்கு தொன்னூற்றி ஒன்பது மனிதர்கள் விழிப்புணர்வின்மையிலேயே வாழ்வதால், அதே ருசிக்கு அடிமைகளாகி விடுகிறார்கள். உடலுக்கு உற்சாகமளிக்க வேண்டிய உணவே உபத்திரவங்களை உருவாக்க ஆரம்பித்து விடுகிறது.
- ருசிக்கு அடிமையானவன் - பசிக்கு புசிக்காமல், ருசிக்கு புசிக்க ஆரம்பிக்கிறான். ருசிக்கு புசிப்பதால்… உடலின் உண்மைத் தேவையை மீறி உடலுக்குள் விதவிதமாய் உணவு கொட்டப்படுகிறது.
- உடல், உருசியின் குப்பைத் தொட்டியாக மாறிவிடுகிறது.
- மனிதனுக்கும் மிருகத்திற்கும் இடையிலிருக்கும் ஒரு மிகப்பெரிய வித்தியாசத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்.
மனிதன் உருசிக்குச் சாப்பிடுகிறான். மிருகங்கள் பசிக்குச் சாப்பிடுகின்றன!
இளைஞா! இளைஞா!
- உலக வாழ்க்கையில் குடும்பஸ்தனாக வாழ முடிவு எடுப்பவர்களுக்கு ராமகிருஷ்ணர் அழகான வாசகமொன்றை சொல்லியிருக்கிறார்.
- "குடும்ப வாழ்க்கையில் நுழையும் நீ ஆன்மீகத்தை கொஞ்சம் கையில் எடுத்துச் செல். நிச்சயமாக சிக்கித் தவிக்க மாட்டாய்". பலாப்பழம் அறுக்கும்போது வெறும் கையால் அதைச் செய்தால் பழத்தின் பிசுபிசுப்பு கையில் ஒட்டிக் கொள்ளும். பிசுபிசுப்பில் விரல்கள் சிக்கித் தவிக்கும். ஒரே ஒரு முறை எண்ணெயில் கை நனைத்து விட்டுச் செய்தால் விரல்கள் பிசுபிசுப்பில் சிக்காது. பலாப்பழம் அறுப்பதும் எளிதாக நடக்கும். விரல்களும் சிக்கித் தவிக்காது. சங்கடமேயிருக்காது.
ஆன்மீகமும் இது போன்றதுதான், கொஞ்சம் ஆன்மீகத்தோடு வாழ்க்கையை எதிர்கொண்டால், வாழ்க்கையை இன்னும் ஆழமாக அனுபவிக்க முடியும். அதே நேரத்தில், வாழ்க்கைச் சூழலில் சிக்காமல் எளிதில் தப்பிவிடலாம்.
- இந்தச் செய்தியை இளைஞர்கள் ஒன்றுக்கு இரண்டு முறையாவது படித்து மனதில் நிறுத்திக் கொண்டு கட்டுரையைத் தொடருங்கள்.
உங்கள் உலகம்
- உங்கள் மனதைப் பொறுத்து எண்ணங்கள் அமையும்.
- உங்கள் எண்ணங்களைப் பொறுத்து வாழ்க்கை அமையும்.
- உங்கள் வாழ்க்கையைப் பொறுத்து வெற்றி அமையும்.
- உங்கள் வெற்றியைப் பொறுத்து ஆரோக்கியம் அமையும். புரிகிறதா... ? இது ஒரு சக்கரம். மக்கள் எப்போதும் நம்மை பிரதிபலிக்கும் கண்ணாடிகளாகவே செயல்படுகிறார்கள். நாம் மரியாதை கொடுத்தால், மரியாதை கிடைக்கும். சீண்டினால் சீண்டப்படுவோம். அன்பு செலுத்தினால், அன்பு கிடைக்கும்.
எப்போதும் எரிச்சலும் கோபமுமாக இருந்தால் உலகமே தவறு செய்வதாகவும், ஒவ்வொருவரும் திட்டம் போட்டு எரிச்சல் படுத்துவதாகவும் தோன்றும்.
- ஒருவருடைய உலகத்திற்கும் மற்றவருடைய உலகத்திற்கும் சம்பந்தமே இல்லை. அவரவர் கருத்து, கண்ணோட்டம் மனம் பொருத்து உலகம் விதவிதமாக மாறி மாறித் தெரியும்.
- உண்மையில் எல்லோரும் இயல்பானவர்கள். அருமையானவர்கள். நீங்கள் உலகத்தை அணுகும் விதத்தைப் பொறுத்து உலகம் மாறுபடும். உலகம் அருமையானது... உணர ஆரம்பியுங்கள். உண்மை புரியும் !
சாதிக்கும் சக்தி பெற ...
- தெளிவில்லாமல் சாதனை ஒட்டத்தில் குதித்தாலும், சாதிக்கலாம், சாதனை சாத்தியமே. ஆனால் சாதித்த திருப்தி இருக்காது. எதை சாதிக்க வேண்டும் ? என்ற தெளிவு இருந்தால், 'இதை சாதிக்க வேண்டும்' என்ற முடிவு பிறக்கும். சாதித்தபின் சாதனையும் திருப்தி தரும். காரணம் அது உங்கள் சாதனை. உங்களின் விருப்பப்படி நிறைவேறி இருக்கிறது.
ஏன் சாதிக்க வேண்டும் ? எதை சாதிக்க வேண்டும் ? என்ற தெளிவு பிறக்க வேண்டுமானால் ... உலகம், வாழ்க்கை மற்றும் உங்களையும் சேர்த்துப் புரிந்து கொள்ளும் பக்குவம் வேண்டும்.
- சாதிக்கும் சக்தியையும், சிந்திக்கும் சக்தியையும் அதிகரிக்கத் தியானம் எளிதில் உதவும்.
- வாழ்க்கையில் குதிக்கும் முன்பு தியானத்தையும் வாழ்க்கையில் எடுத்துக்கொள்ளுங்கள். சந்தோஷம் கலந்த சாதனையின் வாசல் திறக்கும்.
உள் சுதந்திரத்தின் அளவை அதிகரியுங்கள்
- மனமோ கட்டுப்படுத்துகிறது. எண்ணங்களோ அலைக்கழிக்கிறது - இரண்டுக்கும் இடையில் சிக்கிக் கொண்ட மனிதன், கூண்டுக்குள் அடைக்கப்பட்ட கிளி,
- சிறகிருந்தும் சுதந்திரமாய் பறக்க முடியாமல் தடுமாறுவதுபோல், தடுமாறுகிறான்.
- 'எண்ணங்களால் என்னை அலைக்கழிக்கும் அகங்காரமே! நீ எங்கே இருக்கிறாய் ?' என உள்நோக்கி பிரயாணித்தலே தியானம் செய்தல்.
- இந்தப் பிரயாணித்தில் ஒரு முக்கிய விதி - பிரயாணி பார்வையாளனாக மட்டுமே இருக்க வேண்டும்.
- நம்பி பிரயாணத்தால் ... மனிதனை அடிமைப்படுத்தி, கொக்கரிக்கும் அகங்காரத்தை மூக்கறுத்து, 'சுதந்திரமாய் ஆர்ப்பரிப்பது' என்பது தியானத்தால் நிச்சயம் சாத்தியமாகும்.
- இது விசித்திரமான பிரயாணம். * பிரயாண வேகம் அதிகமானால், எண்ணங்களின் வேகம் குறையும்.
- எண்ணங்களின் ஓட்டம், குறையக் குறைய உள் சுதந்திரத்தின் அளவு அதிகரிக்க ஆரம்பிக்கும்.
விழித்துக் கொள்ளுங்கள்
- விழித்துக்கொண்டு சந்தோஷமாக வாழும் வாழ்க்கையைவிட, விழி பிதுங்கப் பிதுங்க! வாழும் சதா சச்சரவு நிறைந்த வாழ்க்கையில்தான் பலருக்கும் அதிக ஈர்ப்பு இருக்கிறது - இது ஒரு பெரிய விந்தை!
- 'கண்களைத் திற' என்றால் எல்லோருக்கும் கண் இமைகளை மாத்திரமே திறக்கத் தெரியும். கண் இமைகளைத் திறப்பது, கண்களைத் திறப்பது அல்ல ... என்றால் மனித மனது புரிந்து கொள்ளக் கடினப்படும். அதேபோல்தான் விழித்துக் கொள்வதும், மனித மனதால் இதைப் புரிந்து கொள்ள முடியாது.
- 'விழித்துக் கொள்வது' தன்னையே அழித்துக் கொள்ளும் தன்மை படைத்த அகங்காரத்தை ஒழிப்பதற்கான எளிய வழி.
- விழித்துக் கொள்ளாதவரை... * வாழ்வில் துக்கம் வழிந்து கொண்டேதான் இருக்கும்.
- நம்மில் பலபேர் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக வீணாக்கிய பிறகுதான் அதன் அருமையை உணர ஆரம்பிக்கிறோம்.
- மீதமுள்ள சொற்ப வாழ்க்கையை பயனுள்ளதாக வாழ்வது எப்படி? - என்ற கேள்வியை கேட்கும் நீங்கள், எந்த வயதினராக இருந்தாலும் சரி, வீணான வாழ்க்கைப் பகுதியைப் பற்றி கவலைப் படுவதை நிறுத்துங்கள். எஞ்சியிருக்கும் வாழ்க்கை ஒரு சில ரத்தினங்களுக்குச் சமமம்.
- எஞ்சிய வாழ்நாட்களை அருமையாக வாழக் கற்றுக் கொள்ளுங்கள். அது போதும், உங்களுடைய எல்லா மனத் துக்கங்களும் மறைந்துவிடும்.
- இதற்குப் பெயர்தான் 'விழித்துக் கொள்வது'.
- இன்பம் பொங்க ஆரம்பிக்கும். இந்தப் பிறவியையும், அடுத்தடுத்த பிறவிகளையும் இன்பமாக அனுபவிப்பதற்கான அடிப்படைத் தகுதியை பெற்றுவிடுவீர்கள்!