நித்ய யோகா. உங்கள் அசைவுகளுக்கு உயிர் அளிப்பது
உடலும் மனமும் இருப்புத்தன்மை அளவில் ஒன்றியிருப்பதற்காகச் செய்யப்படுவதே யோகா. அதற்காக உடலைப் பழக்கப்படுத்தும் நுட்பமே யோகா. இதுவே யோகாவின் ஒரே நோக்கமாகும். யோகா என்றால் 'இணைத்தல்' அல்லது இணைப்பதற்கான வழிமுறை என்றே பொருள். யோகா என்பது செயலையும் செயல்முறையையும் குறிக்கும் வினைச்சொல்; அது ஒரு இலக்கையோ அல்லது ஒரு இறுதி முடிவையோ குறிக்கும் பெயர்ச்சொல் அல்ல .
உடலளவில் யோகா என்பது நமது தனி விழிப்புணர்வை பிரபஞ்ச விழிப்புணர்வுடன் இணையச் செய்வதற்கான எட்டு பாதைகளில் ஒன்றே.
மிகச்சிறந்த யோக வல்லுநரான எனது குருவால், நான் முதற்கொண்டு, யோகா பயிற்றுவிக்கப்பட்டேன். ஞான சக்தியைத் தக்கவைத்துக்கொள்ளும் அளவிற்கு என் உடலைத் தயார்படுத்த, அவர் ஒரு கருவியாகச் செயல்பட்டார். ஆன்மிகத் தேடலின்போது, நான் செய்த கடுந்தவங்களுக்கு என் உடல் தயாராவதற்கு இது உதவியது.
சிலர் மிகச் சாதாரணமாக, ப்ராணாயாமம் - மூச்சுப் பயிற்சியைச் செய்கிறார்கள். ஏதோ ஒரு உடற்பயிற்சிபோன்று ப்ராணாயாமத்தையும் நினைத்துக்கொண்டு அவர்கள் இப்படிச் செய்கிறார்கள். இது மிகவும் அபாயமானது. ப்ராணன் என்பது உயிர்ச்சக்தி. தவறாக உபயோகிக்கும்பொழுது, அது உயிருக்கேகூட ஆபத்தாக முடியலாம்.
சரியாகப் பயன்படுத்தப்படும்பொழுது, இது ஆயுளை நீட்டிக்கும். உணவோ, தண்ணீரோ அல்லது காற்றோ இல்லாமல்கூட உயிர்வாழ ப்ராணாயாமம் உதவும். இதற்கெல்லாம் ஆழ்ந்த புரிதலும் சரியான வழிகாட்டுதலும் பயிற்சியும் தேவை.
நம்முடைய ஆசிரியர்கள், நித்ய யோகாவைக் கற்றுத்தருகிறார்கள். நித்ய யோகா என்பது, யோகாவின் தந்தையான பதஞ்சலி முனிவரின் உடல்மொழிகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.
நித்ய யோகா, தியானத்தை அடிப்படை அம்சமாகக் கொண்டுள்ளது. தியானத்தோடு அஷ்டாங்க யோகாவின் மற்ற அம்சங்களும் இணைக்கப்பட்டு, ஒரு முழுமைத்துவமிக்க முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நித்ய யோகா என்பது, நம் உடலை எந்த அளவிற்கு வளைக்கிறோம் என்பதல்ல. நாம் எந்த இலக்கை நினைத்துக்கொண்டு, இந்த உடல் அசைவுகளைச் செய்கிறோம் என்பதே முக்கியம். நம்முடைய நோக்கமும், அதை ஆழ்ந்து மனதுக்குள் பாவனை செய்துபார்ப்பதுமே, அந்த இலக்கை அடைய வழிவகுக்கும். உங்கள் உடல் அந்த இலக்கை நினைத்தபடியே இயங்கும். நீங்கள் அதற்கு எந்தவொரு முயற்சியும் எடுக்க வேண்டாம்.
நித்ய யோகா, உங்கள் வாழ்க்கையில் இன்னும் சில அசைவுகளை ஏற்படுத்துவது இல்லை. உங்கள் அசைவுகளுக்கு உயிர் அளிப்பது.
தங்கள் உடல் நிலைக்கு யோகா என்பது முடியாத காரியம் என்று நினைத்த அறுபது, எழுபது வயதானவர்கள்கூட, நித்ய யோகா செய்கிறார்கள். அவர்களே ஆச்சரியப்படும் வகையில், அவ்வளவு சுலபமாக எந்தவொரு சிரமுமின்றி அவர்கள் உடல் இயங்குகிறது!
இந்தக் கம்ப்யூட்டா் காலத்தில், 'மூளை மாசுபாடு' எனும் விஷயத்தால் நாம் பாதிக்கப்பட்டுள்ளோம். இதற்கு தியானம் ஒன்றே தீர்வு . நித்ய யோகா, தியானத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. எனக்குத் தெரிந்த வரையில், இதுதான் பாதுகாப்பானதும் நல்ல பலன்தரக்கூடியதுமான யோகா.