KAILASA Library/பகவத் கீதை விளக்கவுரை / மத் பகவுத்திதை [ஜீவன்முக்த விஞ்ஞானம்]/எங்கும் எப்போதும் நிறைந்திருக்கும் நித்யானந்தம்Sign in
பகவத் கீதை விளக்கவுரை / மத் பகவுத்திதை [ஜீவன்முக்த விஞ்ஞானம்]

எங்கும் எப்போதும் நிறைந்திருக்கும் நித்யானந்தம்

உள்ளுணர்வு நிலையில்தான் நம்முடைய முழு ஆற்றலையும் நாம் வெளிப்படுத்துகிறோம்.

நம்முடைய விழிப்புணர்வற்ற பகுதிக்குள் நாம் ஆழ்ந்த அமைதியுடனும் அங்கிருக்கும் எண்ணப்பதிவுகளை அகற்றி, ஆழ்ந்த அமைதியையும் விழிப்புணர்வையும் அங்கே நிரப்பும்போது, இந்த உள்ளுணர்வு நிலையிலே இருப்போம்.

ஒரு சின்ன கதை

ஒரு மரவெட்டி, காட்டின் வெளிப்புறத்தில் இருந்த மரங்களை வெட்டிக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஞானிக்கு, அவர் தம்முடைய உணவைப் பரிமாறினார். அந்த மனிதரின் நடத்தையால் மனமகிழ்ந்த ஞானி, அந்த மரவெட்டியிடம், ''ஆழ்ந்து உள் செல்,'' என்று சொல்லி ஆசீர்வதித்தார்.

தம்மைக் காட்டிற்குள் சென்று மரம்வெட்டச் சொல்வதாக நினைத்த அம்மரவெட்டி, அடுத்த நாள் அந்தக் காட்டிற்குள் இன்னும் ஆழ்ந்து உள் சென்றார். அங்கே ஒரு மிகப்பெரிய வெள்ளிச் சுரங்கம் இருப்பதைக் கண்டார். அதைக்கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்த அவர், அந்த வெள்ளிப் படிமங்களை வெட்டி எடுத்து விற்று செல்வந்தரானார்.

சில மாதங்களுக்குப் பிறகு, அந்த ஞானி அதே வழியாகப் பயணம்செய்தார். அந்த மரவெட்டி இந்த முறையும் அந்த ஞானியை மிகவும் நன்றாக கவனித்துக்கொண்டார். அந்த பணக்காரர் ஞானியிடம் மிகுந்த நன்றியுணர்வுடன் நடந்துகொண்டார். புறப்படுவதற்கு முன் மீண்டும், "ஆழ்ந்து உள் செல்,'' என்று சொன்னார்.

'ஆழ்ந்து உள் செல்' - ஞானியின் இவ்வார்த்தைகள் நம் ஒவ்வொருவராலும் சிந்திக்கப்பட வேண்டிய வார்க்கைகள்!

அடுத்த நாள் அந்த மரவெட்டியும் ஞானியின் சொற்படி, இன்னும் ஆழ்ந்து காட்டிற்குள் சென்றார். அங்கே ஒரு தங்கச் சுரங்கத்தைக் கண்டார். அந்தத் தங்கப் படிமங்களை வெட்டி எடுத்து விற்று, அவர் மேலும் செல்வந்தா் ஆனார். அவா் அந்த ஞானியிடம் ஆழ்ந்த நன்றியுணர்வுடனும் பிரார்த்தனை உணர்வுடனும் இருந்தார். அந்த ஞானியைச் சந்தித்து, அவருக்கு நன்றி தெரிவிக்க விரும்பினார்.

இன்னும் சில மாதங்களுக்குப் பிறகு, அந்த ஞானி மீண்டும் அவ்வழியாகச் சென்றார். அந்த மரவெட்டி, நடந்தவற்றையெல்லாம் சொல்லி, தம்முடைய சொத்துக்களை ஞானியுடன் பகிர்ந்துகொள்ள விரும்பினார். அந்த ஞானி புன்னகையுடன் அவருடைய கோரிக்கையை நிராகரித்துவிட்டு, ''ஆழ்ந்து உள்செல்,'' என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

ஞானியின் வார்த்தைகளை வேத வாக்காக எடுத்துக்கொண்டு, அவர் காட்டிற்குள் இன்னும் ஆழ்ந்து உள்ளே சென்றார். இம்முறை அவர் வைரச் சுரங்கத்தைக் கண்டு வியந்தார். அதை வைத்து, அந்த நாட்டின் அரசரைவிட பெரிய செல்வந்தர் ஆனார்.

அவர் அந்த ஞானியின் வருகைக்காக மிகுந்த ஆவலுடன் காத்திருந்தார். அவர் வந்தவுடன் இந்த நல்ல செய்தியை அவருடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற பூரிப்பில் இருந்தார்.

அதேபோல் அந்த ஞானி அவ்வழியாகச் சென்றார். இம்முறையும், ''ஆழ்ந்து உள்செல்,'' என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

இம்முறை அந்த மரவெட்டி, காட்டிற்குள் ஆழ்ந்து செல்லவில்லை, மாறாக, 'அந்த ஞானி சொல்வதில் இன்னும் ஆழமான ஏதோ ஒரு சூட்சுமம் இருக்கிறது. என் புரிதலுக்கு அப்பாற்பட்ட ஒரு லட்சியும் அதனுள் உள்ளது' - என ஆழ்ந்து சிந்திக்க ஆரம்பித்தார்.

சட்டென அவருக்குள் இந்தப் புரிதல் பளிச்சிட்டது: 'அந்த ஞானி, 'ஆழ்ந்து உள் செல்' என்று சொல்வது காட்டிற்குள் அல்ல, எனக்குள்!'

ஆழ்ந்த விழிப்புணர்வினாலும், அந்த ஞானியின் மீது வைத்திருந்த நம்பிக்கையினாலும், தம்முள் ஆழ்ந்து உள்சென்று, ஞானமடைந்து விட்டார்.

மிகச்சிறந்த செல்வம் வெளி உலகில் இல்லை, அது நமக்குள்தான் இருக்கிறது. மிகப்பெரிய மகிழ்ச்சி நமக்குள்தான் இருக்கிறது, வெளியே அல்ல. வெளியுலக விஷயங்களைப்பொறுத்தமட்டில், சந்தோஷமான ஒவ்வொரு அனுபவமும் ஒரு சோகமான அனுபவத்தால் பின்தொடரப்படுகிறது.

சந்தோஷம், எதிர்பார்ப்புகளை ஏற்படுத்துகிறது. அந்த எதிர்ப்பார்ப்புகள்

நிறைவடையாதபோது சோகம் ஏற்படுகிறது. தேடுதல் நமக்குள்ளேயே நிகழும்போது, எதிர்பார்ப்புகள் உதிர்ந்துவிடும் பந்தங்கள் அறுந்து, ஒரு புது ஆனந்தத்தை அனுபவிப்போம். அந்த ஆனந்தமே எங்கும் எப்போதும் நிறைந்திருக்கும் நித்யானந்தம்.

சரியான இடத்தில் தேடுங்கள்

நமக்கு இதைப்பற்றி விழிப்புணர்வு இல்லாமல், ஆனந்தத்தை வெளியுலகில் தேடுகிறோம், நமக்குத் தெரிந்த ஒரேவழி இதுதான் என்பதற்காக !

ஒரு சின்ன கதை

ஒரு மாணவர், சிறப்பு அழைப்பாளரின் விரிவுரைகளின்போது உறங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒருநாள் அவருடைய நண்பர் அவரிடம், ''நீ ஏன் இதுபோன்ற சிறப்பு அழைப்பாளரின் விரிவுரைகளுக்கு வரவேண்டும் ? இங்கு வந்து உறங்கத்தான் செய்கிறாய், இங்கு உறங்குவதற்குப் பதிலாக, நீ உன் அறையிலேயே படுத்துறங்கலாமே!' என்றார்.

அதற்கு அந்த மாணவர் சொன்னார், ''நான் தூக்கமின்மை வியாதியால் பாதிக்கப்பட்டுள்ளேன். இங்கு மட்டும்தான் என்னால் நிம்மதியாக உறங்க முடிகிறது, '' என்றார்.

ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள், இந்த மாணவரைப்போலவே நாமும், ஆனந்தத்தைத் தேடி, பல இடங்களுக்குச் செல்கிறோம்.

நாம் சரியான விஷயத்தை, தவறான இடங்களில் தேடிக்கொண்டிருக்கிறோம். அப்படிப்பட்ட எண்ணமே நம்முள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாம் செய்ய வேண்டியதெல்லாம், நம்மை உள்முகப்படுத்துவதே.

சங்கரர் சொல்கிறார், 'நல்லது செய்பவர்களுக்கு, கிருஷ்ணரிடம் இருந்து நினைவுகளும் அறிவும் வருகிறது. கெட்டது செய்பவர்களுக்கு, நினைவுகள் அழிவதும், அறிவுக் குறைபாடும் கிருஷ்ணராலேயே ஏற்படுத்தப்படுகிறது', என்கிறார்.

இங்கே நினைவு மற்றும் அறிவு என்று சொல்லும்போது, நம்முடைய உண்மையான இயல்பினைப் பற்றிய புரிதலையும், கிருஷ்ணரே எல்லோருடைய இதயங்களிலும் வீற்றிருக்கிறார் என்ற புரிதலையும், நாம் தெய்விக சக்தியின் ஒரு பாகமே என்ற புரிதலையும் உணர்தலையுமே குறிப்பிடுகிறார்.

சங்கரர் சொல்கிறார், முழுவதுமாகச் சரணாகதி செய்யும் சீடன், தெய்விகத்தைத் தன் இதயத்தில் உணருவான் என்கிறார். இது ஒன்றே நமக்குத் தேவை, குருவிடம் சரணாகதி செய்யும்போது, நாம் கிருஷ்ணரைக் காணலாம்.